search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லாரி ஸ்டிரைக் நீடிப்பு"

    தமிழகத்தில் லாரி ஸ்டிரைக் 7-வது நாளாக நீடித்து வருவதால் சாப்பாட்டுக்கு வழியின்றி லாரி டிரைவர்கள் தவித்து வருகின்றனர். #LorryStrike
    நாமக்கல்:

    லாரி உரிமையாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 20-ந்தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்றுடன் ஸ்டிரைக் 7-வது நாளாக நீடிக்கிறது.

    நாமக்கல்லில் லாரி உரிமையாளர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தினால் சரக்கு ஏற்றி வந்த லாரிகள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    லாரி டிரைவர்கள் ஏற்றி வந்த சரக்குகளை இறக்க முடியாமல் கடந்த 7 நாட்களாக லாரியிலேயே சரக்குகள் இருப்பதால் பொருட்கள் நாசமாக கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    மேலும் லாரிகளிலேயே டிரைவர்கள் வாழ்க்கை நடத்தும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 7 நாட்களாக இதுபோன்ற நிலை நீடித்து வருவதால் டிரைவர்கள் மற்றும் கிளீனர்கள் தங்கள் குடும்பத்தை பார்க்க முடியாமலும், குழந்தைகளை கவனிக்க முடியாத அவல நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர்.

    இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரை சேர்ந்த டிரைவர் கருணாகரன் கூறியதாவது:-

    கடந்த 20-ந்தேதி மதுரையில் இருந்து கிரானைட் கற்களை ஏற்றிக் கொண்டு பர்கூருக்கு சென்று கொண்டிருந்தேன். லாரி ஸ்டிரைக் காரணமாக லாரிகள் இயக்க முடியாததால் லாரியை நாமக்கல்லில் நிறுத்தி விட்டேன்.

    லாரியில் சரக்குகள் இருப்பதால் அப்படியே லாரியை விட்டு விட்டு போக முடியாது. ஏனெனில் லாரியில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் இருக்கின்றன. சம்பந்தப்பட்ட இடத்தில் சரக்குகளை கொண்டு போய் சேர்க்கும்வரை முழு பொறுப்பும் எங்களுடையது.

    ஆகையால் தான் என்னை போன்று இங்கு வெளி மாவட்ட, வெளி மாநில டிரைவர்கள், மற்றும் கிளீனர்கள் வீட்டுக்கு போக முடியாமல் கவலையுடன் உள்ளனர். கொசு தொல்லை காரணமாக லாரியில் சரியாக தூங்க முடிவதில்லை.

    குடிக்க தண்ணீர் இல்லாததால் விலைக்கு வாங்கி தண்ணீர் குடித்து வருகிறோம். செலவு தான் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. கையில் இருக்கும் பணம் காலியாகி வருவதால் நல்ல உணவு கூட சாப்பிட முடியாமல் உள்ளோம். இதனால் உடல் நலம் ரொம்ப பாதிக்கப்பட்டு இருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #LorryStrike
    லாரிகள் வேலைநிறுத்தம் 7-வது நாளாக நீடித்து வரும் நிலையில் டெல்லியில் அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் இன்று முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என தெரிகிறது. #LorryStrike
    சேலம்:

    பெட்ரோல்-டீசல் விலையை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வரவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் கடந்த 20-ந்தேதி முதல் காலவரையற்ற லாரி ஸ்டிரைக் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. இன்று 7-வது நாளாக போராட்டம் நீடிக்கிறது.

    இப்போராட்டத்தில் தமிழகத்தில் 4½ லட்சம் லாரிகள் உள்பட நாடு முழுவதும் 90 லட்சம் லாரிகள் பங்கேற்றுள்ளன. மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு அழைக்காததால் லாரி உரிமையாளர்கள் ஸ்டிரைக்கை தீவிரப்படுத்தி உள்ளனர். வட மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரும் கோழித்தீவனம், வெங்காயம், சமையல் எண்ணெய், மைதா, கோதுமை, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தடைப்பட்டுள்ளது.



    தமிழகத்தில் இருந்து வடமாநிலங்களுக்கு செல்லும் ஜவுளி, ஜவ்வரிசி, இரும்பு கம்பிகள், மஞ்சள், தீப்பெட்டி, உப்பு, சோப்பு, பட்டாசு, மோட்டார் இயந்திர பாகங்கள், தேங்காய், துணிகள், காய்கறிகள் உள்ளிட்ட பொருட்கள் டன் கணக்கில் தேங்கி உள்ளன. அதேபோல் சரக்கு ரெயில்களில் வந்த பொருட்களை லாரிகளில் ஏற்றாததால் ரெயில்வே கிடங்குகளில் தேங்கி உள்ளன.

    விவசாயப் பொருட்கள் அழுகி வீணாவதோடு, கடும் விலை வீழ்ச்சியையும் சந்தித்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஜவுளி உற்பத்தி பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படாமல் இருப்பதால் மலைபோல் குவிந்து காணப்படுகின்றன.

    சேலம் செவ்வாய்ப்பேட்டையில் உள்ள லாரி மார்க்கெட்டில் 7-வது நாளாக லாரிகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் வெளி மாநில லாரி டிரைவர்கள் கடந்த 7 நாட்களாக வேலை இழந்து பரிதவிப்புக்குள்ளாகி உள்ளனர்.

    அன்னதானப்பட்டி, செவ்வாய்ப்பேட்டை, நெத்திமேடு, கொண்டலாம் பட்டி உள்ளிட்ட பகுதிகளில் லாரிகள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டு, அதில் டிரைவர்கள் படுத்து உறங்குகிறார்கள்.

    நாமக்கல் பைபாஸ், பெங்களூரு பைபாஸ், சென்னை பைபாஸ் சாலைகளில் லாரிகள் போக்குவரத்து இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது.

    லாரிகள் இயங்காததால் சேலத்தில் இருந்து ஜவ்வரிசி, ஜவுளி, இரும்பு கம்பிகள், மஞ்சள், புளி, மளிகை பொருட்கள் எண்ணெய் வகைகள் உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய பொருட்கள் வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைக்க முடியாமல் கோடிக்கணக்கில் பொருட்கள் குடோன்களில் தேக்கம் அடைந்துள்ளன.

    ஆத்தூர் புதுப்பேட்டை வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரந்தோறும் பருத்தி, மஞ்சள் ஏலம் நடக்கிறது. அதில் ஏலம் விடப்பட்ட 3½ கோடி ரூபாய் மதிப்புள்ள 5,800 மஞ்சள் மூட்டைகள், 6 கோடி ரூபாய் மதிப்புள்ள 27 ஆயிரம் பருத்தி மூட்டைகள் கூட்டுறவு சங்க வளாகம் கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. லாரிகள் வேலை நிறுத்தம் நீடிப்பதால் ஏற்றிச்செல்ல முடியாத நிலை உருவாகி உள்ளது.

    லாரி ஸ்டிரைக் தொடர்பாக மத்திய அரசு இதுவரை பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை. அரசுக்கும், டீசல் பொருட்கள் விற்பனை வரி என 2 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

    இன்று டெல்லியில் அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் நிர்வாகிகள் முக்கிய ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இதில் நாடு முழுவதிலும் இருந்து லாரி அதிபர்கள் கலந்து கொள்கின்றனர். எனவே, இதில் அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என தெரிகிறது.

    இது குறித்து சேலம் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கத்தலைவர் சென்னகேசவன் கூறியதாவது:-

    தமிழகத்தில் 15 ஆயிரம் கோடி ரூபாய், சேலத்தில் 400 கோடி ரூபாய் மதிப்புள்ள சரக்குகள் குடோன்களில் தேக்கமடைந்துள்ளன. வேலை நிறுத்தத்தால் தமிழக லாரி உரிமையாளர்களுக்கு, 100 கோடி ரூபாய் அளவில் வாடகை இழப்பு ஏற்பட்டுள்ளது. அதே நேரம் டிரைவர்கள், கிளீனர்கள், மூட்டை தூக்கும் தொழிலாளர்கள், மினி டோர், சரக்கு ஆட்டோக்கள் உள்ளிட்ட சிறு வாகனங்களை இயக்கி வந்த 1½ கோடி பேர் 7 நாட்களாக வேலை இழந்துள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தமிழகத்தில் இருந்து வடமாநிலங்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டிய பல்வேறு அத்தியாவசிய பொருட்கள் லாரி புக்கிங் அலுவலகங்களில் மலைபோல் தேங்கி உள்ளன.

    இது குறித்து தமிழ்நாடு லாரி புக்கிங் ஏஜெண்டுகள் சம்மேளன தலைவர் ராஜவடிவேல் கூறுகையில், தமிழகத்தில் தொடரும் லாரிகள் ஸ்டிரைக்கால் ரூ.50 ஆயிரம் கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. கோடிக்கணக்கில் பொருட்கள் குடோன்களில் தேக்கமடைந்துள்ளன. எனவே லாரி உரிமையாளர்களை அழைத்து மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் கோரிக்கைளை தீர்வு காண வேண்டும் என்றார். #LorryStrike
    தமிழகத்தில் லாரி ஸ்டிரைக் 6-வது நாளாக நீடித்து வருவதால் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்ந்து வருகிறது. போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்த லாரி உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர். #LorryStrike
    நாமக்கல்:

    டீசல் விலை, சுங்கக்கட்டணம் 3-ம் நபர் விபத்து, காப்பீட்டு பிரீமியம் உயர்வு போன்றவற்றை குறைக்க வலியுறுத்தி நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் கடந்த 20-ந் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டம், இன்று 6-வது நாளாக நீடித்து வருகிறது.

    இதில் தமிழகத்தில் உள்ள 4½ லட்சத்துக்கும் அதிகமான லாரிகள் பங்கேற்று உள்ளதால் சரக்கு போக்குவரத்து அடியோடு முடங்கியுள்ளது. மார்க்கெட்டுகள், லாரி புக்கிங் ஆபீசுகளில் பொருட்கள் மலைபோல் தேங்கி உள்ளது.

    இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. இந்த ஸ்டிரைக்கை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    நாமக்கல்லில் சரக்கு ரெயில் மூலம் வந்த ரேசன் அரிசி, மக்காச்சோளம் மூட்டைகளையும் இறக்காமல் லாரி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். மற்றொரு பிரிவினர் அந்த சரக்குகளை இறக்க முயன்றனர். இதற்கு நாமக்கல் லாரி உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் லாரிகளில் லோடு ஏற்றிய நிலையில் ரெயில்வே ஸ்டேசனில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பிரச்சினை ஏற்படாமல் இருக்க போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.



    6-வது நாளாக ஸ்டிரைக் நீடித்ததால் பெட்ரோல் பங்குகளில் டீசல் விற்பனை சரிந்துள்ளது. இதனால் நாமக்கல், திருச்செங்கோடு, சங்ககிரி பகுதிகளில் உள்ள பெட்ரோல் பங்குகளில் தினமும் 80 சதவீதம் டீசல் விற்பனை குறைந்துள்ளது.

    இது குறித்து நாமக்கல் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் கூறுகையில், தினமும் 30 ஆயிரம் லிட்டர் டீசல் விற்பனை ஆகும். தற்போது தினமும் 8 ஆயிரம் மட்டுமே விற்பனை ஆகிறது. இதனால் எங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டதுடன், மத்திய-மாநில அரசுக்கும் இழப்பு ஏற்பட்டுள்ளது.

    இது குறித்து லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் குமாரசாமி கூறியதாவது:-

    லாரி ஸ்டிரைக் 6-வது நாளாக நடைபெற்று வருகிறது. மத்திய அரசு இதுவரை பேச்சு வார்த்தைக்கு அழைக்கவில்லை. இது மெத்தன போக்கை காட்டுகிறது. இந்த ஸ்டிரைக்கால் லாரி உரிமையாளர்களுக்கு ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக அரசுக்கு 2 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் லாரி தொழிலை நம்பி இருக்கும் டிரைவர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்கள் வருவாய் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த தொடர் போராட்டத்தால் வெளி மாநிலங்களில் இருந்து வரும் அத்தியாவசிய பொருள்கள் வரத்து குறைந்துள்ளதால் கடுமையான விலைவாசி உயர்வு ஏற்படும். இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள். ஸ்டிரைக் குறித்து அகில இந்திய மோட்டார் காரங்கிரஸ் மாநில நிர்வாகிகளை அழைத்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #LorryStrike
    லாரி உரிமையாளர்களின் போராட்டம் இன்று 2-வது நாளாக நீடித்து வரும் நிலையில் வெளிமாவட்ட மற்றும் மாநில லாரி டிரைவர்கள், தொழிலாளர்கள் லாரிகளிலேயே உணவு சமைத்து சாப்பிட்டு வருகின்றனர். #LorryStrike
    திண்டுக்கல்:

    லாரி உரிமையாளர்களின் போராட்டம் இன்று 2-வது நாளாக நீடித்து வருகிறது.

    சுங்கவரி கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும், ஜி.எஸ்.டி. வரம்பிற்குள் பெட்ரோல், டீசல் விலையை கொண்டு வர வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இன்று 2-வது நாளாக போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் 3500-க்கும் மேற்பட்ட லாரிகள் இயங்கவில்லை. அவை அனைத்தும் திண்டுக்கல்-பழனி ரோட்டில் உள்ள பேட்டையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    தினசரி ரூ.10 கோடிக்கு மேல் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. லோடு மேன்கள் உள்பட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    வெளிமாவட்ட மற்றும் மாநில லாரி டிரைவர்கள் மற்றும் தொழிலாளர்கள் லாரிகளிலேயே உணவு சமைத்து சாப்பிட்டு வருகின்றனர்.

    அரசு உரிய நடவடிக்கை எடுத்து போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டும். இதே நிலை தொடர்ந்தால் லாரி டிரைவர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த மக்களும் கடுமையாக பாதிப்படைவார்கள் என தெரிவித்தனர். #LorryStrike

    ×